சொகுசு காரில் சென்று ஆடு மற்றும் கோழிகளை திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கோரட்டூர் காவல்துறையினர் அப்பகுதியை சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த காரில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் ஆணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் வசிக்கும் அஷ்ரப் மற்றும் லட்சுமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சொகுசு காரில் சென்று அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கோழி மற்றும் ஆடுகளைத் திருடிய நபர்கள் இவர்கள்தான் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பின் இவர்கள் ஊரடங்கு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட கோழி, ஆடுகளை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் மாட்டாமல் இருப்பதற்காக ஒரு கைக்குழந்தையுடன் தம்பதிகள் போல நடித்து சொகுசு காரில் சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 14 நாட்டு கோழிகள் மற்றும் 3 ஆடுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.