வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மூலக்கூறு உருவாக்குவதற்கான புதிய வழிமுறையை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை அன்று இயற்பியல், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ்-ன் பொதுச்செயலாளர் கோரன் ஹான்சன் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியலுக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளார்.
அதன்படி மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான புதிய வழிமுறையை “சமச்சீரற்ற ஆர்கனோகாடாலிசிஸ்” கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி டேவிட் மேக்மில்லன் மற்றும் ஜெர்மன் விஞ்ஞானி பெஞ்சமின் லிஸ்ட் ஆகிய இருவருக்கும் வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு விருது பெறுவோருக்கு ரூ. 8 கோடி ரொக்கப்பரிசு மற்றும் தங்கபதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது.