உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ப்ளூ டிக் வசதிக்கு அமெரிக்காவில் 8 டாலர்கள் என்று கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் மாதம் 719 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டுவிட்டர் ப்ளூ டிக் வசதியானது தற்போது ஐபோன்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் ப்ளூ டிக் கட்டண சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் இணையும் பயனர்களுக்கு எந்தவித வெரிஃபிகேஷனும் இன்றி ப்ளூ டிக் வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் இருப்பவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் twitter இல் ப்ளூடிக் வசதிக்கு கட்டண வழிமுறையை அறிமுகப் படுத்தியதற்கு உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.