கொரோனா நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை செவிலியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆக பணியாற்றி வந்தவர்கள் எம்மா டேவிஸ், கேட்டி டேவிஸ். இரட்டையர்களான இவ்விருவரும் அச்சு அசல் ஒரே முக ஜாடை கொண்டவர்கள். கல்லூரியில் படிக்கும் போதும் இருவரும் ஒன்று போல் நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படிப்பு முடிந்ததும் ஒரே மருத்துவமனையில் இருவருக்கும் வேலையும் கிடைத்தது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து இவ்விருவரும் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டனர். அதனை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு இருவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வந்த நிலையில் இரட்டை சகோதரிகளான கேட்டி மற்றும் எம்மா இருவருமே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் பணியாற்றி வந்த அதே மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை கேட்டி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் எம்மா உயிரிழந்தார்.
இரட்டை சகோதரிகளான இந்த செவிலியர்களின் மரணம் இங்கிலாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவ்விருவரின் மற்றொரு சகோதரி ஜோயி டேவிஸ் கூறுகையில் “உலகத்திற்கு இருவரும் ஒன்றாகவே வந்தனர், இப்போது உலகைவிட்டு இருவரும் ஒன்றாகவே போய்விட்டனர். பிறப்பும் இறப்பும் அவர்களை பிரிக்கவில்லை” என்றார்.