Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர உத்தரவு!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற கிளையில், தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து மாநில அரசின் கொள்கை முடிவிற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில அரசு முடிவெடுத்தால் அதில் நீதிமன்றம் தலையிடாது என கூறி வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும், வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |