துருக்கி அதிபருக்கு எதிராக அந்நாட்டு மதுக் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வணிக வளாகங்கள், கஃபே, சிகை அலங்கார நிலையங்கள் ஆகியவைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும் பார், மதுபான கடைகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் ஆகியவை கடந்த 11 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில் இதுவரை திறக்க அனுமதிக்கப்படவில்லை.
துருக்கி அதிபர் எர்டோகன் மதுவை வெறுக்கும் பொருட்டு மது அருந்துதல் சமூகத்திற்கு விரோதமானது மற்றும் உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கக்கூடியது என்று பொது இடங்களில் அடிக்கடி கூறுகின்றார். மேலும் துருக்கியர்கள் மது அருந்துவதை நிறுத்தி விட்டு குளிர்ந்த தயிரை அருந்துமாறு தொடர்ந்து கூறி வருகின்றார். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி 1௦௦க்கும் அதிகமான மதுபான விடுதிகளை திறந்து வைத்து பாதிக்கப்பட்ட பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் டிரம்ஸ் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்ததாவது “கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த 11 மாதங்களாக நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே மதுக்கடைகளை சுகாதார விதிகளின் கீழ் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். நாங்களும் எங்களுடைய வாழ்வை நடத்த வேண்டும் என வேதனையுடன் கூறியுள்ளனர்.