கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி நிலையங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவர்கள் படிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியும். அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கான கட்டணம் செலவை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில்தான் அரசு எங்களுக்கு வழங்கும் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அது போதாது என்று கோரிக்கைகளை முன்வைத்து தனியார் கல்வி நிலையங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழு தான் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படக்கூடிய செலவுகளை கணக்கீட்டு கட்டணங்களை நிர்ணயித்து வருகின்றன. ஆனால் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களைப் போல செலவுகளை கணக்கில் எடுத்து அரசு எங்களுக்கு வழங்குவது போதாது. இதனால் பல தனியார் கல்வி நிலையங்கள் பாதிப்படைகின்றன.
குறைந்த கட்டணத்தை அரசு வழங்கி வருகிறது. எனவே இந்த சட்ட பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது… வழக்கு விசாரணையை தொடங்கிய நீதிபதிகள், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்கள்.
கொரோனா பேரிடர் காலங்களில் இந்த மாதிரியாக தனியார் பள்ளிகள் ஒரு முடிவெடுத்து வழக்கு தொடர்ந்துள்ளது, பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க அற்புதமாக அமைந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிராக தனியார் கல்வி நிலையங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளதால் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சியில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.