தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலர் கொட்டாய் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பின் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் பவித்ரம் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தை அவரது உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே அதனை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க வந்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின்னர் வெறையூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்த விசாரணையானது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.