இந்தியாவில் பழமை வாய்ந்த கட்சியாக இருக்கும் காங்கிரஸில் தற்போது கோஷ்டி மோதல்கள் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் கோஷ்டி மோதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்தும் கோஷ்டி மோதல் நடைபெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றுள்ளார்.
இதேபோன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ் அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல தொண்டர்களும் கார்கே மற்றும் சோனியா காந்தியை சந்தித்து புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடந்த கோஷ்டி மோதல் குறித்து கே.எஸ் அழகிரி டெல்லி மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதி தற்போது அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளும் தன்னுடைய ஆதரவாளர்களாகவே இருக்க வேண்டும் என ரூபி மனோகரன் வலியுறுத்தி வருகிறார்.
இந்த தேர்தலுக்கும், மாநில தலைவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நெல்லையிலிருந்து 6 பேருந்துகளில் 300 பேர் வந்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர். அவர்கள் என்னையும் தினேஷ் குண்டூராவையும் வெளியே செல்ல விடாமல் சத்தியமூர்த்தி பவனை பூட்டி விட்டனர். இதன் காரணமாகத்தான் தொண்டர்கள் மத்தியில் கோஷ்டி மோதல் நடந்தது என்று எழுதியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையின் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குறித்து டெல்லி மேலிடம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.