தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கர், கோவை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சித்தார், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 4 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது தவிர ஆற்காடு, சாத்தூர், கன்னியாகுமரி சிவலோகம், வால்பாறை உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.