அசாம் மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையான சகஸ்திர சீமா பால் வீரர் வீட்டில் 13 வயது நிரம்பிய பழங்குடியின சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா சர்மாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்று இருந்துள்ளது. அதோடு சிறுமியின் குடும்பத்தினரும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல் மந்திரி சிஐடி அதிகாரிகளிடம் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி சிஐடி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது மத்திய ஆயுதப்படை வீரர் கிருஷ்ணா கமல் பர்வா கடந்த ஜூன் மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். ஆயுதப்படை வீரர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவருடைய மனைவியிடமும், தன்னுடைய குடும்பத்தினரிடமும் சிறுமி நடந்ததை கூறி விடுவேன் என்று கூறியதால் ஆத்திரத்தில் சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை போன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அதன்பிறகு தான் செய்த குற்றத்தை மறைப்பதற்காக உயர் அதிகாரிகள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு அவர் லஞ்சம் கொடுத்துள்ளார்.
இது சிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதால் லஞ்சம் பெற்ற எஸ்.பி ராஜ்மோகன் ரே உட்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதோடு துலா காவல் நிலைய அதிகாரி, போலியான பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்த 4 மருத்துவர்கள், போலியான அறிக்கை கொடுத்த மாஜிஸ்திரேட் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 1000 பக்க குற்றப்பத்திரிகை ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் வீட்டு வேலைகளில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்தவர்கள் குறித்த அனைத்து வழக்குகளையும் மீண்டும் விசாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.