தகுந்த காரணமின்றி 5 மரங்களை வெட்டியதற்காக 100 மரகன்றுகளை நட வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே 2 வாகை மரங்கள், அரசமரம், நாவல் மரம், வேப்ப மரம் என ஐந்து மரங்கள் இருந்துள்ளது. இதனை தடுந்த காரணமின்றி மின்வாரிய ஊழியர்கள் வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 15ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவை பெற்று கொண்டு விசாரணை நடத்திய மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முகமது ஜியாவுதீன் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி தலைவர், செயலாளர், கிராம நிர்வாக அதிகாரி, மின்வாரிய பொறியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி உள்ள விளையாட்டு மைதானத்தின் அருகில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் புதிய மின் கம்பிகள் அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்களை வெட்டுவதற்கு ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்துள்ளது.
மேலும் கிராம நிர்வாகம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஊழியர்கள் தவறுதலாக மரத்தை வெட்டிவிட்டதாக மின்வாரியம் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து கவனக்குறைவாக மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் 5 மரங்களை வெட்டியதற்கு பதிலாக ஊராட்சி நிர்வாகம் 100 மரக்கன்றுகளை ஒரு மாதத்திற்குள் நடவேண்டும் என நீதிபதி முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டு மரம் நடுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தினர் மாவட்ட நிரந்தர நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.