செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்களில் ஒருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் பாலகொண்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் வசிக்கும் 20 கூலித் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி தோளில் சுமந்து கொண்டு வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, திடீரென காட்டு யானை ஒன்று அவர்கள் முன் வந்துள்ளது. அந்த யானை செம்மரம் வெட்டியவர்களை துரத்தியதோடு, அதில் ஒருவரை மிதித்துக் கொன்று விட்டது.
இதனையடுத்து அந்த வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் செம்மரக்கட்டை கடத்திய குற்றத்திற்காக இருவரை கைது செய்து விட்டனர். ஆனால் மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்து விட்டனர். இதனை அடுத்து வனத்துறையினர் யானை மிதித்து உயிரிழந்தவரின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் செம்மரம் வெட்ட சென்ற இடத்தில் யானை மிதித்து ஒருவர் உயிரிழந்த காரணத்தால் தங்கள் மீது வனத் துறையினர் வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவரது உடலை வாங்க உறவினர்கள் வர மறுக்கின்றனர் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.