தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயிலில் அடிபட்ட காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த ரயில் 28 வயதுள்ள ஆண் காட்டு யானை மீது மோதி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் இந்த யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் யானையை சாடிவயல் முகாமிற்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.
இந்நிலையில் அந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி லாரியில் ஏற்றி அங்கிருந்து சாடிவயல் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து வெல்லம், தர்ப்பூசணி ஆகியவற்றை உணவாக கொடுத்து ஊசி மூலம் மருந்து ஏற்றுகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதுடன், அதன் உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.