மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாப்பரவலின் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க குறைதீர் கூட்டத்திற்குப் பதிலாக, பெட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதில் மனுக்களை போட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் வசித்து வரும் திருநங்கையான சுவேதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவினை கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவரை சோதனை செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த விஷ பாட்டிலை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியரிடம் அவரை மனு வழங்க செய்துள்ளனர். இதனையடுத்து திருநங்கை சுவேதா கொடுத்த மனுவில், தான் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருவதாகவும், காவல்துறையினர் தவறான தகவலின் படி தனது வீட்டில் நடத்திய சோதனையில் தங்க நகைகளை எடுத்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த தங்கநகைகளை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவாக காவல்துறையினரிடம் இருந்து தனது தங்கநகைகளை மீட்டுத்தருமாறு அந்த மனுவில் சுவேதா குறிப்பிட்டுள்ளார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய சுவேதா மொபட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து திடீரென உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரைக் காப்பாற்றுவதற்காக அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சுவேதா தனது பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.