தேசிய குற்ற ஆவண காப்பகம் ரயில் விபத்துகளில் சென்ற வருடம் மட்டும் 24,000 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவர தகவல்களை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 27,987 ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 76.3 சதவீதம் ரயில் விபத்துகள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரங்களை தெரியப்படுத்தியுள்ளது. அதோடு கடந்த வருடம் நடந்த இந்த ரயில் விபத்துகளில் 24,619 பேர் மரணம் அடைந்ததாகவும், அதில் 21,361 பேர் ரயில் மோதியதால் ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக அளவில் விபத்து ஏற்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 6,388 விபத்துகள் பதிவாகியுள்ளது. இரண்டாமிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 3,980 விபத்துக்களை பதிவு செய்துள்ளது. இதனிடையே கடந்த மூன்று வருடங்களில் மட்டும் கவனமின்றி ரயில் தண்டவாளத்தை கடந்ததால் 30 ஆயிரம் பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.