கோவை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் அதே பகுதியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அரவிந்தசாமி எட்டிமடை பகுதிக்கு அருகிலுள்ள மதுக்கரை அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விடுமுறை முழுவதையும் தனது நண்பர்களுடன் செலவழித்து வந்துள்ளார் அரவிந்தசாமி.
அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தனது நண்பர்களுடன் காளியாபுரம் பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற அரவிந்த், குளித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென சேற்றில் சிக்கி மாட்டிக் கொண்டார். பின் அவரை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர்கள் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர்.
ஆனால் மீட்பு பணி தோல்வியடைந்து அரவிந்தசாமி பரிதாபமாக உயிர் இழந்தார். பின் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவனின் உடலை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் பெற்றோர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த அவர்கள் மகனின் உடலை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.