முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்ட கடை வியாபாரிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் வார சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் சின்னரெட்டிபட்டி, அத்திப்பட்டி, நாகனூர், கழுகூர், கீழ்வெளியூர், தோகைமலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து சந்தையில் தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி, ஆய்வாளர் சௌந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சந்தையில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளில் அவர்கள் சோதனை செய்தனர். மேலும் முககவசம் அணியாத கடைகளின் உரிமையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் ரூபாய் 200 அபராதம் விதித்து வசூல் செய்தனர். முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுரை கூறினர்.