Categories
மாநில செய்திகள்

சட்ட விரோதமாக இயங்கும் பார்களை மூட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்..!!

சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கூடங்களில், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் இரண்டு கடைகளில் மட்டுமே பார் வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள நான்குக் கடைகளை ஒட்டி சட்ட விரோதமாக ஆளும் கட்சியினரின் 24 மணி நேரமும் மது விற்பனையுடன் கூடிய பார் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடைகளில் இரு தினங்களுக்கு முன் ஆய்வு நடத்திய டாஸ்மாக் உதவி மேலாளர், மதுக்கூடம் ஒன்றிற்குச் சீல் வைத்தபோது பார் நடத்துபவர்களால் சிறை வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச்சூழலில், சட்ட விரோத மதுக்கூடங்களை மூடக்கோரியும், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், அனுமதியின்றி ஆளும்கட்சியினரும், எம்எல்ஏக்களும் மது பார்களை நடத்திவருவதாகக் குற்றஞ்சாட்டினர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகும் இந்த பார்களில் மது விற்பனை நடப்பதாகவும், இந்த முறைகேடான பார்களை அரசும் மாவட்ட நிர்வாகமும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Categories

Tech |