ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தாவரவியல் பூங்காவில் இருந்து சேரிங் கிராஸ் சந்திப்புக்கு ஊர்வலமாக சென்றபோது காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வியாபாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனை அடுத்து ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஏற்கனவே கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் சுற்றுலா தளங்களை மூடுவதால் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் சப் கலெக்டரின் பரிந்துரையின் படி வியாபாரிகள் கோரிக்கை மனுவினை கலெக்டருக்கு அனுப்பி வைத்த பிறகு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.