பிரபலமான போஜ்புரி திரைப்பட நடிகராக வலம் வருபவர் பவன் சிங். இவருடைய மனைவி ஜோதி சிங். இவர் தற்போது தன்னுடைய கணவர் பவன் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு பவன் சிங்குடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு திருமணம் நடந்து சில நாட்களிலேயே என்னுடைய கணவரின் தாயார் பிரதீமா சிங், மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் என்னுடைய தோற்றம் குறித்து கேலி செய்தனர். அதன் பிறகு என்னுடைய மாமாவிடம் இருந்து நான் வாங்கிய 50 லட்சம் ரூபாயையும் அவர்கள் பறித்துக் கொண்டனர்.
இதனையடுத்து ஒவ்வொரு நாளும் என்னுடைய கணவர் குடித்துவிட்டு வந்து என்னை துன்பப்படுத்தினார். நான் ஒருமுறை கர்ப்பமாக இருந்தேன். அப்போது என்னுடைய கணவனின் குடும்பத்தினர் எனக்கு ஏதோ ஒன்றினை குடிக்க கொடுத்தனர். அதை நான் குடித்தவுடன் என்னுடைய கரு கலைந்து விட்டது. அதோடு தினந்தோறும் என்னை டார்ச்சர் செய்து தற்கொலை செய்து கொள்ளவும் மனரீதியாக என் கணவர் தூண்டினார். என்னிடம் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றினை வாங்கி வரும்படி என் கணவர் கூறினார்.
அவர் மீதான புகார்கள் அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை நான் தகுந்த நேரத்தில் வெளிக்கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஜோதி சிங் தன்னுடைய கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு தன்னுடைய பராமரிப்பு செலவுக்கு பணம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். மேலும் கடந்த 2014-ம் ஆண்டு பவனுக்கு நீலம் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் அடுத்த வருடமே நீலம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.