இந்த ஆண்டு ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தக்கூடாது என்று அந்நாட்டில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் டோக்கியோ, ஒசாகா மற்றும் பெரு நகரங்கள் உட்பட 10 மாகாணங்களில், கொரோனா கட்டுப்பாடு விதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் , மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது . அதோடு தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு விதிகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதற்கு முன் கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா தொற்று பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடைபெறுவதற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தற்போது சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் அந்நாட்டில் 80 சதவீத மக்கள் போட்டி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய போட்டியாளர்களால் ,தொற்று பரவல் அதிகரிக்கக்கூடிய ஆபத்து காணப்படுவதாக சர்வே கணக்கின்படி 87.7 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர்.