ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வரும் 29ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என கூறியுள்ளார். அந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பொதுமக்கள் விலையில்லா ரேஷன் பொருட்களை பெறலாம் எனக் கூறியுள்ளார்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், ஜூன் மாதத்திலும் விலையில்லா ரேஷன் பொருட்களை வழங்குவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.