கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6761 ஆக உயர்ந்துள்ளது. அதில் 6039 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 17வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 14 தேதி பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொரு மாநிலமும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மட்டும் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 896 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.