நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளிய சுற்றிய நபர்களிடம் போலீசார் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகின்றது. இதனையடுத்து தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்லும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், எனினும் வாகன போக்குவரத்து இன்னும் குறையவில்லை.
இதனைத்தொடர்ந்து நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி சிவலிங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் நாமக்கல் காவல்நிலையம் எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களிடம் துணை சூப்பிரண்டு அதிகாரி சிவலிங்கம் கையெடுத்து கும்பிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளார்.