இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான (TNPSC, SSC, IBPS, RRB, Etc) பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக போட்டித்தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லா பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று மாதகாலம் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும். பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. இந்தப் பயிற்சியை மேற்கொள்ள விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் ஏப்ரல் 27 முதல் மே 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு தேர்வாணைய குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். 500 மற்றும் 300 தேர்வர்கள் அனுமதிக்கப்படும் இந்த பயிற்சி மையத்தில் சேர விரும்புவோர் உடனே விண்ணப்பியுங்கள்.