டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பல பேர் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக டி.ஜி.பி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகாரளித்தது. இந்த புகாரை சி.பி.சி.ஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்துள்ளது. இடைத்தரகர்கள் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை டிஎன்பிஎஸ்சி தகுதிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிக்கையில், தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களை ஆய்வுசெய்ததில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு மையங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு மையங்களை தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் தவறு நடக்கவில்லை. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் இடைத்தரகர்கள் உதவியுடன் 99 தேர்வர்கள் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 99 தேர்வர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 39 பேர், முதல் 100 இடங்களில் வந்துள்ளனர். அவர்களுக்கு பதில் தகுதியான 39 தேர்வர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.