tnpsc முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
தமிழக அரசு ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக தெரிகிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் இது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி முறைகேடானது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெறித்தனமாக படிக்கும் இளைஞர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இனி யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அந்த எண்ணம் தோன்றுவதற்கு டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் சரி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் அவர்களது நிலத்தை கையகப்படுத்துவதற்கு அவர்களிடையே கருத்து கேட்கத் தேவையில்லை என்று கூறுவது கோபத்தை தூண்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.