TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார்.
இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். மேலும் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுமென்று சிபிசிஐடி அறிவித்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் ஜெயக்குமாரை பிடிக்க கர்நாடகா , ஆந்திரா , கேரள உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிபிசிஐடி போலீசார் விரைந்தனர். இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை 23ஆவது நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கை சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.