டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு நான்காம் நிலை பணியிடத்திற்கு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் அடுத்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தட்டச்சர், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். தற்போது குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4ல் ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெறும். அதில் தமிழ்மொழி பாடப் பகுதியிலிருந்து 100 வினாக்கள், பொது அறிவு பகுதியில் இருந்து 75 வினாக்கள், திறனறி தேர்வு பகுதியில் இருந்து 25 வினாக்கள் என மொத்தமாக 200 வினாக்கள் கேட்கப்படுகிறது.
தமிழ் மொழிப்பாடம் :-
இந்த பகுதியில் 100 வினாக்கள் 10-ம் வகுப்பு தரத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது. தற்போது அனைத்து போட்டி தேர்வுகளிலும் 40 மதிப்பெண்கள் தமிழ்மொழி தகுதி தாளில் பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த பகுதி மதிப்பீடு செய்யப்படும். இந்த தேர்வுக்கு தேர்வர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படித்தால் மட்டும் போதுமானது.
பொது அறிவு பகுதி :-
பொது அறிவு பகுதியில் இருந்து 75 வினாக்கள், திறனறி வினாக்களாக 25 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்த பகுதிக்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை படித்தாலே போதுமானது.