தாராபுரம் அருகே விவசாயி தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கடித்து குதறியதால் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மநாயக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் பூவேந்திரன் இவர் தனது தோட்டத்தில் பட்டி அடைத்து வைத்து 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பூவேந்திரன் மாலையில் அங்குள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த பூவேந்திரன் மர்ம விலங்கு ஒன்று குதித்து ஓடியதை பார்த்துள்ளார். மேலும் பட்டியிலிருந்து 10 ஆடுகள் கழுத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. இதைப்பற்றி பூவேந்திரன் கொடுத்த தகவலின் பேரில் தாராபுரம் காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மர்ம விலங்கு எதுவென்று தெரியாமல் அச்சம் அடைந்துள்ளனர்.