திருப்பதி கோவிலுக்கு இ-பாஸ் இல்லாமல் யார் வந்தாலும் பாரபட்சமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், கோவில் பூஜை வழிபாடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கோவில் வளாகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆன்லைன் மூலம் குறைந்த அளவிலான பெண்களுக்கு மட்டும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பிற மாநிலங்களிலிருந்தும் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரலாம். ஆனால் அவர்கள் இரண்டு மாநில அரசுகளிடமிருந்து முறையான இ பாஸ் பெற்று வரவேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆன்லைனில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வழங்கப்படும் அனுமதி சீட்டுக்கும்,இ பாஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அனுமதிச்சீட்டு, இ பாஸ் வேறு என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இ பாஸ் இல்லாமல் யார் வந்தாலும், பாரபட்சமின்றி அவர்கள் அப்படியே திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.