திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவையானது வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறும். ஆனால் இந்த சேவையானது மார்கழி மாதத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற புதன் கிழமை மார்கழி மாதமானது நிறைவு பெற்றாலும் வியாழக்கிழமை அன்று உதயத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்க போகிறார். எனவே அன்று காலை 9 மணிக்கு மேல் பஞ்சாங்கப்படி தை மாத கடிகை தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் சூரிய உதயத்திற்கு பின் தொடங்கும் நட்சத்திரங்கள் மற்றும் திதிகளை மட்டுமே தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்வதால் வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுரம் சேவையானது நடத்தப்படும். இதனையடுத்து வருகின்ற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையிலிருந்து சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோவில்கள் மற்றும் கோசாலைகளில் மாட்டுப் பொங்கல் நாளன்று கோ பூஜைகள் நடத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த பூஜையானது தேவஸ்தான தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் அதேநாளில் குண்டூரில் நசரத்பேட்டை பகுதியில் காமதேனு பூஜையானது நடத்தப்படவிருக்கின்றது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது திருப்பதியில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியம் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் குஜராத் மாநிலத்தில் ஊதுவத்திகள், குளியல் சோப்புகள், சுத்திகரிக்கும் பொருட்கள், உரங்கள் மற்றும் சாம்பிராணி பத்திகள் போன்ற பொருட்கள் பஞ்சகவ்வியத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதே நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் நடத்திவரும் கோ சாலைகளிலும் பின்பற்றி பஞ்சகவ்யத்தை கொண்டு மேலும் புதிய பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என ஜவஹர் ரெட்டி கூறியுள்ளார்.