திருச்சியில் பொதுமக்களுடன் நல்லுறவை பேணாத 80 காவலர்கள் பணியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்த காரணத்தினால் தந்தையும், மகனும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கே கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதேபோல் இந்த சம்பவத்திற்கு பிறகும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் நல்லுறவு பேணவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. அதற்கு உதாரணமாக தென்காசி ஆட்டோ ஓட்டுனரை குறிப்பிடலாம். அதேபோல் சாத்தான்குளம் பகுதியில் விசாரிக்கச் சென்ற மேஜிஸ்ட்ரேட்டையே “உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் திமிர் ஆகவும் பேசியுள்ளார். ஆகவே தமிழக காவல்துறை இதனை சீரியசாக எடுத்துக்கொண்டு தற்போது பொதுமக்களுடன் காவல்துறையினர் நல்லுறவைப் பேணும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காவல்துறையினர் சமீபத்தில் பொது மக்களுடன் நல்லுறவைப் பேணாத காவலர்களை கண்டறிந்து அவர்களை பணியில் இருந்து உயரதிகாரிகள் விடுவித்துள்ளனர். இவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு பொது மக்களுடன் நல்லுறவைப் பேணுவது, உளவியல் குறித்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் காவல்துறையினரும், பொதுமக்களும் நெருங்கிய நண்பர்களாக பழகுவதற்கான வழிமுறையை ஏற்படுத்த உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவல்துறையினரின் இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் மத்தியிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.