சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 15ம் தேதி வரை தாமதக்கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் நுகர்வோர் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் ஜூலை 15ம் தேதி வரை மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று முதல் 12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜூலை 15ம் தேதி வரை குறிப்பிட்டுள்ள 4 மாவட்டத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மின்கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணையில் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஊரடங்கு பகுதிகளுக்கு மட்டும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது .