டிக் டாக் மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சசிகலா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த மே மாதம் 22ஆம் தேதி சென்னை சென்ற ரமேஷ் சசிகலாவின் பெற்றோரை சந்தித்து பேசியதுடன், அவரது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியுள்ளார். இதனையடுத்து இருவரும் சென்னையில் இருந்து வீரகனூர் புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே உள்ள தைலமர தோப்புப்பிற்கு சசிகலாவை அழைத்து சென்று ரமேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சசிகலா கூறியதற்கு மறுப்பு தெரிவித்த ரமேஷ் தன்னை பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து கடந்த மாதம் 15ஆம் தேதி தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்துள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் கடந்த 17ஆம் தேதி வீரகனூர் காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ரமேஷ்யிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரமேஷ் டிக் டாக் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி வரும் கையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.