ஊருக்குள் புகுந்து புலி மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகாலை வேளையில் மண் வயல் என்ற பகுதிக்குள் நுழைந்த புலி கிரீஸ் என்பவருக்கு சொந்தமான காளை மாட்டை அடித்து கொன்று விட்டது. இதனை அடுத்து கிரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது புலி அங்கிருந்த ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, இறந்த மாட்டிற்கான உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டுமென வனத்துறையினரிடம் கிரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பின் இறந்த மாட்டின் உடலை கால்நடை டாக்டர் பரஞ்ஜோதி பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது புலிகளும் கால்நடைகளை அடித்துக் கொன்று வருவதால் அதனை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.