அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனச்சரகத்தில் கரடி, மான், யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனசரகத்தில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் கொட்டாய் பகுதியில் இரவு 9 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த நாய்கள் குரைத்த சத்தத்தை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரது மகனான திவாகர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது எதிரே சுமார் 3 மீட்டர் இடைவெளியில் சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் ரோட்டை கடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிறுத்தை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் திவாகர் சிறுத்தையை சுமார் 3 மீட்டர் இடைவெளியில் பார்த்ததால் அந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதனை அடுத்து சிறுத்தை ரோட்டை கடக்கும் காட்சியானது அப்பகுதியில் வசிக்கும் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். அதோடு முதல் முறையாக காட்டிலிருந்து சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.