தூங்குவதற்காக சைக்கிளில் சென்ற தொழிலாளியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள இடைகால் யாதவர் பகுதியில் தச்சுத் தொழிலாளியான கல்யாணி ஆசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தச்சு பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் தனது தச்சுப் பட்டறையில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் கல்யாணி ஆசாரி வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது சைக்கிளில் தச்சு பட்டறைக்கு உறங்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இந்த விபத்தில் கல்யாணி ஆசாரி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்யாணி ஆசாரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.