உடல்நல குறைவினால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் உள்ள பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சுரேஷ் உடல் நலம் குறைவினால் அவதிப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக சுரேஷ் தூக்க மாத்திரை சாப்பிட்டு அதிக நேரம் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் சுரேஷ் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.