அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுக்கு எவ்வித இடமும் கொடுக்கப் படவில்லை. அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அதிமுக கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக டெல்லியின் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவியேற்றாலும் சசிகலா கட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மாறினார்.
அதாவது இபிஎஸ் முதல்வராக இருந்தால், தான் சிறைக்கு சென்று விட்டு வந்த பிறகு மீண்டும் பதவியை கைப்பற்றி விடலாம் என சசிகலா நினைத்திருந்தார். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-க்கு கூட கட்சியில் இடம் கிடையாது என்று சொல்லி வரும் நிலையில், சசிகலாவை மட்டும் எப்படி சேர்த்துக் கொள்வார். இருப்பினும் கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலா மூவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு டெல்லி ஒரு தீர்வு காணும் என்று நினைத்திருந்த போது, சசிகலா, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மூவரும் சேர்ந்து கட்சியில் செயல்படுவதை தான் தற்போது பாஜக விரும்புகிறது. முதலில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதை விரும்பாத பாஜக தற்போது சசிகலா இணைய வேண்டும் என்று விரும்புகிறது. ஏனெனில் அதிமுக கட்சி ஆனது ஒன்றாக இருந்தால் மட்டும் தான் பாஜக வருகிற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கணக்கு போட்டு வைத்திருக்கிறது.
இது பற்றி இபிஎஸ் இடம் பலமுறை கூறியும், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். மேலும் பாஜகவின் ஆதரவு தற்போது ஓபிஎஸ்-க்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவில் தான் கட்சியின் தலைமை பொறுப்பு யாருக்கு என்பது தெரிய வரும். அதற்குள் இபிஎஸ் தன்னுடைய முடிவை மாற்றி கொள்வாரா என்ற எகிர்பார்ப்பும் நிலவுகிறது.