வீடு புகுந்து பொருட்களை வண்டியில் ஏற்றி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா ஜோதிபாய் என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆண்டுகளாக மேடவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தரைதளத்தில் அவர் வசித்து வருவதாகவும், தனது மகன் கௌதம் என்பவர் இரண்டாவது தளத்தில் அவருடைய குடும்பத்தோடு வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீட்டின் முதல் தளத்தில் ஒரு வழக்கு தொடர்பான பொருட்களை வைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது கணவர் பலராமன் என்பவர் 2 பேர் மீது ஏற்கனவே நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், சில மர்ம நபர்கள் வீடு புகுந்து அவர்களது வீட்டில் இருந்த பொருட்களை வண்டியில் ஏற்றி சென்றுள்ளனர். அதோடு அந்த நபர்கள் ஒரு வாரத்திற்குள் அவர்கள் வசிக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடையவர்களின் தூண்டுதலின் காரணத்தினாலேயே இவ்வாறு மர்ம நபர்கள் மிரட்டி உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதய நோயாளியான தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்குமாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.