தோட்டத்தினில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கள்ளிப்பட்டி ஒலக்காரன்பாளையம் கிராமத்தில் ஆறுமுகம்-துளசிமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் அவ்வப்போது தங்கியிருந்தனர். கடந்த 3 நாட்களாகவே துளசிமணி காணாமல் போனதாக தெரிகிறது. இந்நிலையில் ஆறுமுகம் தோட்டத்தின் வழியாக சென்ற சிலர் அங்கு துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஆறுமுகம் கூறியதாவது “தனது மனைவி துளசிமணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்து வந்தது.
அதன்படி கடந்த 14-ஆம் தேதி ஆயுத பூஜை அன்று என் மனைவி தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே அன்று விசேஷ நாள் என்பதால் யாரும் அடக்கம் செய்ய வர மாட்டார்கள் என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் நானே தோட்டத்தில் குழி தோண்டி என் மனைவியின் உடலை புதைத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் துளசிமணியின் இறப்பில் காவல்துறையினருக்கு சந்தேகம் இருந்ததால் அவரது உடலை தோண்டி எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி குழுவினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆறுமுகத்தை அழைத்துக்கொண்டு துளசிமணி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
அங்கு துளசிமணி புதைக்கப்பட்ட இடத்தை பணியாளர்கள் தோன்றி அவரது உடலை வெளியே எடுத்தனர். இதனைதொடர்ந்து மருத்துவர்கள் துளசிமணியின் சடலத்தை அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின் துளசிமணியின் உடலை பணியாளர்கள் அங்கேயே புதைத்துவிட்டு சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “துளசிமணியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடற்கூறுகள் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பரிசோதனை முடிவு வந்த பின் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணம் அடைந்தாரா என்பது தெரியவரும்” என்று தெரிவித்துள்ளனர்.