குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம் தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலர் மீட்கப்பட்டும், சிலர் சிகிச்சையில் உள்ளனர். மீட்பு நிவாரணம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி.மோகன்பாய் குந்தாரியாவின் தங்கை குடும்பத்தினர் 12 பேர் இறந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் கூறியது, தொங்குபாலம் அறுந்து விழுந்த விபத்தில் தனது சகோதரி குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. பாலம் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அவர் தனது கண் முன்பே ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் எடுக்கப்பட்டதாக மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.