மாட்டுவண்டி தொழிலாளி உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாட்டு வண்டிகளில் வைத்து மணலை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது ஊரில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அப்போது பாஸ்கர் “தான் எப்படியும் இறந்து விடுவதாகவும், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே என் மக்கள் வாழ்வதற்கு அரசாங்கம் மாட்டுவண்டிக்கென மணல் குவாரியினை திறக்க வேண்டும் என்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாஸ்கர் பேசி ஆடியோ வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனையடுத்து சி.ஐ.டி.யூ செயலாளர் ஜெயபால் தலைமையில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர். அதன்பின் அவரது குடும்பத்தினருக்கு சங்க நிர்வாகிகள் ஆறுதல் கூறியதுடன், மருத்துவர்களிடம் பாஸ்கருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனைதொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளித்தல், அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குதல், தமிழகம் முழுவதும் மூடப்பட்ட மாட்டு வண்டிகளுக்கான மண் குவாரியை உடனடியாக திறத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், தங்கையன், சோமசுந்தரம், அலெக்சாண்டர், செல்வம், மூர்த்தி, இம்மானுவேல், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.