கந்து வட்டிகாக பெண்ணை மிரட்டிய 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீனா என்ற மனைவி இருக்கிறார். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த நிலையில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனா பலரிடம் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலும் கடன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து கடன் வழங்கியவர்கள் பிரவீனாவிடம் தொடர்ந்து அதிக வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பிரவீனா கொடுத்த புகாரின்படி கடம்பூரை சேர்ந்த செல்வராணி, குருவம்மாள், சாத்தூரை சேர்ந்த ராஜா, கோவில்பட்டியை சேர்ந்த மற்றொரு ராஜா, கயத்தாறைச் சேர்ந்த முருகன், சிவசக்தி உள்ளிட்ட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.