தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் வீணாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் உள்பட பல கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. அதன்பின் சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நெற்பயிர்கள் சாய்ந்து அழகி மோசமடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் வடித்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். இதனையடுத்து இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது, சம்பா நடவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அண்ணாகிராமம் உள்ளிட்ட பல இடங்களில் 1,500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்நேரம் வடகிழக்கு பருவமழையின் போது மிகுந்த கவனத்துடன் பகல் மற்றும் இரவு பாராமல் தொடர்ந்து நெற்பயிர்களை காப்பாற்றி வந்தோம்.
ஆனால் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து விணாகி உள்ளது. பின்னர் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் செலவழித்த நிலையில் 3 மாதத்திற்கு மேலாக கண் இமைக்காமல் காத்திருந்த பயிர்கள் முழுவதும் திடீரென நாசமாகி உள்ளதால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியானது. இதனைத் தொடர்ந்து பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டுமே எங்களது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என கவலையுடன் அவர் தெரிவித்துள்ளார்.