தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீரை மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்பில் முல்லை பெரியாறு அணையில் தடுப்பணை காட்டப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை அரசு தொடங்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாவட்டம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கூடலூரில் நேற்று முல்லைப்பெரியாறு பாசன, குடிநீர் பாதுகாப்பு சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகளின் சார்பில் பால்குடம் எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பால்குடம் எடுத்தவர்கள் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சுந்தரவேலவர் கோவில் வரை நடந்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு போராட்டத்தை கைவிட கோரி தபால் அனுப்பும் போராட்டமும் நடைபெற்றுள்ளது.