திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசைத்தறி வேட்டி சேலை மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் ஆர். காந்தி பேசினார். அவர் பேசியதாவது, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்டு கிடங்கில் இருக்கும் வேட்டி மற்றும் சேலைகளை வருவாய்த் துறையின் மாவட்ட வாரியான தேவை அடிப்படையில் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் தேவையான 177 லட்சம் வேட்டிகள் மற்றும் 177 லட்சம் சேலைகளில் 50 சதவீதம் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10-ம் தேதிக்குள் முடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த வருடம் வழங்கப்பட வேண்டிய சேலைகளில் 15 வண்ணங்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டியின் கரை ஒரு அங்குலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.