இது தோல்விக்கு சமமானதல்ல, விலைமதிப்பற்ற கற்றலுக்கான தருணம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். லேண்டரை படிப்படியாக விஞ்ஞானிகள் குறைத்து வந்தனர்.
23 கி.மீ. தொலைவில் இருக்கும் சந்திரயான்-2 லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரில் இருந்து சமிக்ஞைக்காக (signal) இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் இஸ்ரோ மையமே அமைதியானது.
இஸ்ரோ தலைவர் சிவன் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று கரகரத்த குரலில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல என்றார். பிரதமர் மோடி எதிர்வரும் விண்வெளி திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்று நம்பிக்கையூட்டினார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்ட்விட்டரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில், இது தோல்விக்கு சமமானதல்ல. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு கற்றல் வளைவு இருக்கும். இது, அந்த விலைமதிப்பற்ற கற்றலுக்கான தருணம். நாங்கள் விரைவில் சந்திரனுக்கு செல்வோம் , #ISRO க்கு நன்றி. இஸ்ரோவை நாடு நம்புகிறது மற்றும் பாராட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
This does not tantamount to failure. In Research and Development there will be a learning curve. This, is that precious learning moment. We will soon be on the Moon, Thanks to #ISRO. The Nation believes and applauds ISRO.
— Kamal Haasan (@ikamalhaasan) September 7, 2019